இங்கிலாந்தில் குடியேறும் விராட் கோஹ்லி; ரூ.80 கோடி சொத்து பத்திரத்தை மாற்றினாரா? சகோதரர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது ரூ. 80 கோடி மதிப்புள்ள வீட்டின் அதிகாரப் பத்திரத்தை மாற்றியதாக வெளியான தகவல்களுக்கு அவரது சகோதரர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோஹ்லி, தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ளார்.
இதற்கிடையே, அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது குழந்தைகளுடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே லண்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக குருகிராமில் உள்ள தனது ரூ. 80 கோடி மதிப்பிலான வீட்டின் பொது அதிகாரப் பத்திரத்தை தனது சகோதரர் விகாஸ் கோலியின் பெயருக்கு மாற்றியுள்ளதாகவும் சமீபத்தில் இணையத்தில் செய்திகள் வேகமாகப் பரவின. இந்தச் செய்திகளுக்கு விகாஸ் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் போலியானவை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இணையத்தில் பரவும் இது போன்ற ஆதாரமற்ற கதைகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், எந்தவிதமான சொத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘சமீப காலமாக பரவி வரும் தவறான தகவல்களையும், போலிச் செய்திகளையும் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. சிலருக்கு இதுபோன்று செய்வதற்கே அதிக நேரமும், சுதந்திரமும் இருக்கிறது. உங்களுக்கு என் வாழ்த்துகள்’ என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.