இங்கிலாந்து எதிரான 4வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன் குவிப்பு: காயத்திலும் பண்ட் அரை சதம்
ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூரும் தலா 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 2ம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. முதல் ஓவரில் ஒரு ரன் மட்டும் எடுத்த ஜடேஜா ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து ஷர்துல் தாகூர் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். தாகூர் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து, முதல் நாளில் காலில் அடிப்பட்டு வெளியேறி ரிஷப் பண்ட் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய அரை சதம் அடித்தார்.
ஒரு பக்கம் நிதானமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 27 ரன்னிலும், அடுத்து வந்த காமோஜ் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரிஷப் பண்ட் 54 ரன்னிலும், பும்ரா 4 ரன்னிலும் நடையை கட்ட இந்திய அணி 358 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ஸ்டோக்ஸ் 5 விக்கெட், ஆர்ச்சர் 3 விக்கெட், கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியாம் டாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 46 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. ஜாக் கிராலி 84, பென் டக்கட் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். போப் 20, ரூட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.
* தோனி, சேவாக் சாதனை காலி செய்த பண்ட்
* முதலில் இன்னிங்சில் 2 சிக்சர் அடித்ததன் மூலம் ரிஷப் பண்ட் டெஸ்டில் இதுவரை 90 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சேவாக்கின் மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார்.
* முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்ததன் மூலம் வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் (8 அரைசதங்கள்) வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
* நடப்பு தொடரில் ரிஷப் பண்ட் இதுவரை 5 முறை 50 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக முறை 50 ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
* இந்த தொடரில் பண்ட் இதுவரை 479 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை சமன் செய்து உள்ளார்.