இங்கிலாந்தில் கால்வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
லண்டன்: லண்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இங்கிலாந்தில் கால்வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான டி.என் ரைஸ் முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 26 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கையெழுத்திடப்பட்ட மொத்த முதலீடுகள் ரூ.7020 கோடியாக உயர்ந்து, 15,320 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
'நான் இங்கே வெறும் முதலீட்டுக்காக மட்டும் வரவில்லை. ஜெர்மனி - தமிழ்நாடு ஆகிய இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே ஒரு பாலம் அமைக்க வந்திருக்கிறேன். தொழில் மற்றும் தொழில்நுட்பத்தில், ஜெர்மனியின் துல்லியத்தையும், தமிழ்நாட்டின் ஆற்றலையும் இணைத்தால், உலகளவில் ஒரு புதிய வளர்ச்சிப் பாதையையும், ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே ஒரு வலுவான வர்த்தகப் பாலத்தையும் நம்மால் உருவாக்க முடியும்.
பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும், திறன்மிக்க மனித வளத்தையும் உறுதி செய்வதுடன், பல்வேறு தொழில் கொள்கைகளின்கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க இருக்கிறோம். எனவே, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும் ‘டி.என். ரைசிங்’ என்ற பெயரில் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ.3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவை 9,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு ஐரோப்பா பயணத்தின் அடுத்தக்கட்டமாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இங்கிலாந்தில் கால்வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.லண்டனில் மேலும் பல முதலீட்டாளர்கள் சந்திப்புகள் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.