இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பு: பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் அறிவிப்பு
லண்டன்: இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்ததால் உலக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காசா மீது இஸ்ரேல் சுமார் இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டது. காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம்சாட்டியது. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் தனது குடியேற்றங்களை விரிவுபடுத்துவதால், அமைதிக்கு ஒரே வழியாக கருதப்படும் இரு நாட்டு தீர்வுக்கான சாத்தியக்கூறுகள் குறைந்து வந்தன.
இஸ்ரேலின் செயல்பாடுகளுக்கு உலக அளவில் எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக்கோரி இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அரசியல் அழுத்தமும் அதிகரித்து வந்தது. இந்த சூழலில்தான், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்திற்கு முன்னதாக, காசாவில் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, இந்த ஒருங்கிணைந்த ராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இஸ்ரேலை உலக அரங்கில் மேலும் தனிமைப்படுத்தியுள்ளது.
இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக சாடியுள்ளார். அவர், ‘இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பரிசு’ என்று விமர்சித்துள்ளார். மேலும், ‘ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீன நாடு ஒருபோதும் அமையாது’ என்றும், இந்த அங்கீகாரத்திற்கு இஸ்ரேலின் பதிலடி விரைவில் கொடுக்கப்படும் என்றும் அவர் சபதமிட்டுள்ளார். பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இந்த அங்கீகாரத்தை வரவேற்றுள்ள நிலையில், அமெரிக்கா இந்த முடிவை எதிர்த்துள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளும் விரைவில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.