இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி கட்டாயம்: அண்ணா பல்கலை உத்தரவு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 300 இன்ஜினியரிங் இணைப்பு கல்லூரிகளில் பிஇ., பி.டெக்., படிப்புகளுக்கான கல்வி விதிமுறைகளை அண்ணா பல்கலை கல்வி கவுன்சில் சமீபத்தில் அங்கீகரித்து இருக்கிறது. இதுநடப்பு கல்வியாண்டில் இருந்து முதல் 2 செமஸ்டர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படிநடப்பாண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர இருக்கும் அனைத்தும் பி.இ., பி.டெக்., மாணவர்களுக்கும் வெளிநாட்டு மொழி, வாழ்க்கை திறன்கள் மற்றும் தொழில் சார்ந்த படிப்புகள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றன.
ஏற்கனவே தன்னாட்சி அதிகாரம் (அட்டானமஸ் கல்லூரிகள்) பெற்ற கல்லூரிகள் வெளிநாட்டு மொழி படிப்புகளை வழங்கி வரும் சூழலில், அண்ணா பல்கலைக்கழகம் தற்போது இணைப்பு கல்லூரிகளுக்கு இதை கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், நடப்பாண்டில் இன்ஜினியரிங் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய 2வது செமஸ்டரில் ஜெர்மன், ஜப்பான், கொரியன் மற்றும் டச்சு ஆகிய வெளிநாட்டு மொழிகளில் ஏதாவது ஒன்றை கட்டாயம் படிக்க வேண்டும். மேலும் புதிய விதிமுறைகள் பி.இ., பி.டெக்., படிப்புகளின் முதல் 2 செமஸ்டர்களில் காப்புரிமை தாக்கல், தொழில் பாதுகாப்பு விதிமுறைகள், வெல்டிங் செயல்முறைகள், மின்னணு கூறுகள் போன்ற வாழ்க்கைத் திறன் படிப்புகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், இந்த புதிய விதிமுறைகளின் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் 2 தொழில் சார்ந்த படிப்புகளை வழங்க அனுமதிக்கின்றன. இந்த படிப்புகள் ஒவ்வொரு செமஸ்டரிலும் 15 மணி நேரம் கற்பிக்கக் கூடிய ஒரு ‘கிரெடிட் பேஸ்’ படிப்புகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 3வது செமஸ்டர் முதல் 5வது செமஸ்டர் வரையில் அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு படிப்புகளை கல்லூரிகள் வழங்கலாம் எனவும், மாணவர்கள் எந்த ஒரு ஆன்லைன் படிப்புகளை தொடரலாம் எனவும் இந்த புதிய விதிமுறைகள் அனுமதி அளிக்கின்றன.