சென்னை: பொறியியல் கலந்தாய்வு 2வது சுற்றில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு இன்று தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவினருக்கான 2வது சுற்று கலந்தாய்வு கடந்த 26ம் தேதி தொடங்கி நேற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்த இணையவழி கலந்தாய்வில் கட் ஆப் மதிப்பெண் 178.963 முதல் 143.085 வரை பெற்றுள்ள மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்குள் இணையவழியில் வழங்கப்படும். அந்த தற்காலிக ஒதுக்கீட்டை அவர்கள் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு உறுதிசெய்த மாணவர்களுக்கு 31ம் தேதி காலை 10 மணிக்குள் இறுதி கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவது, அசல் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது உள்ளிட்ட சேர்க்கை நடைமுறை பணிகளை முடித்துவிட்டு ஆகஸ்ட் 4ம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும். இறுதி சுற்று கலந்தாய்வான 3வது சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி நிறைவடையும்.