பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு 19,193 பேருக்கு சேர்க்கை ஆணை: உறுதி செய்யாத மாணவர்களின் இடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும்
மேலும், தொழிற்கல்வி பிரிவில் 929 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையும், 186 மாணவர்களுக்கு தற்காலிக ஆணையும், அரசுப்பள்ளி 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு 141 பேருக்கு சேர்க்கை ஆணையும், 30 மாணவர்களுக்கு தற்காலிக ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் சுற்று கலந்தாய்வில் 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையும், அப்வேர்ட் கொடுத்த 11,359 மாணவர்களுக்கு தற்காலிக ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் வரும் 23ம் தேதிக்குள் ஒதுக்கீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரியில் சென்று சேர வேண்டும்.
அப்வார்ட் கொடுத்து தற்காலிக ஆணை பெற்றுள்ள மாணவர்கள் 23ம் தேதிக்குள் அவர்களுடைய தற்காலிக ஆணையில் குறிப்பிட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையத்திற்கு சென்று (டிஎப்சி) சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு சேர்க்கையை உறுதி செய்யாத மாணவர்களின் இடங்கள் காலியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, காத்திருப்பில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, 2ம் சுற்று ஜூலை 26ம் தேதியும், 3ம் சுற்று ஆகஸ்ட் 7ம் தேதியும் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 21 முதல் 23ம் தேதி வரை துணை கலந்தாய்வும், ஆகஸ்ட் 25 முதல் 26ம் தேதிவரை எஸ்சிஏ., எஸ்சி பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.