டெண்டுல்கர் மகன் அர்ஜுனுக்கு நிச்சயதார்த்தம்: பிரபல தொழிலதிபரின் பேத்தியை கரம் பிடிக்கிறார்
மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இடது கை வேகப்பந்து வீச்சாளர். 25 வயதான இவர் மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக ரஞ்சி போட்டிகளில் ஆடி வருகிறார். ஐபிஎல்லில் மும்பை அணிக்காக 5 போட்டிகளில் ஆடி இருக்கிறார். இந்நிலையில் அர்ஜூனுக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் பேத்தியுடன் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் சானியா சந்தோக். இவர் மும்பையின் பிரபல தொழிலதிபரும், ஹாஸ்பிடாலிட்டி துறையில் கொடிகட்டிப் பறப்பவருமான ரவி காய் என்பவரின் பேத்தியாவார்.
ரவி காய், புகழ்பெற்ற இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் மற்றும் புரூக்ளின் கிரீமரி ஐஸ்கிரீம் பிராண்ட் ஆகியவற்றின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. சானியா சந்தோக், தனது தாத்தாவைப் போலவே ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக முயன்று வருகிறார். அர்ஜுன் மற்றும் சானியாவின் நிச்சயதார்த்த விழாவில், இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ டெண்டுல்கர் குடும்பத்தின் சார்பில் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.