அமலாக்கத்துறையை சுயநலத்திற்கு ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது: வைகோ குற்றச்சாட்டு
திருச்சி: திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: ஈழத்தில் சிங்கள அரசால் நடந்த இனப்படுகொலை போல தான் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடக்கிறது. பாலஸ்தீனத்தை தனி நாடு என இந்திய அரசு அங்கீகரித்து ஐ.நாவில் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். மேலும், ரஷ்யாவில் இந்திய மாணவர்களை ராணுவத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார்கள். ரஷ்ய அதிபர் புதின் ஹிட்லராக மாறிவிட்டாரா? இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு இந்திய மாணவர்களை திருப்பி அழைத்து வர வேண்டும். மேகங்கள் கூடி கலைவதை போல தமிழ்நாட்டில் கட்சிகள் உருவாகி தினமும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. கூட்டணி அமைப்பது அவரவர் விருப்பம்.
மதிமுகவை பொருத்தவரை 8 ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் எடுத்த தீர்க்கமான முடிவின்படி திமுகவை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. முக்கியமாக, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மதிமுக மீது களங்கம் ஏற்படுத்த, நாங்கள் பா.ஜவிற்கு தூது விடுகிறோம். மந்திரி பதவிக்கு ஏங்குகிறோம் என்கிறார்கள். அது அப்பட்டமான முழு பொய். ஒன்றிய அரசு அரசியல் நோக்கோடு தங்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்த வருமான வரி, அமலாக்கதுறையை பயன்படுத்தி வருகிறது. சுய நலத்திற்காக அந்த அமைப்புகளை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்கிறது. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.