அமலாக்க துறை ரெய்டில் அம்பலம் தவறான வழியில் ரூ.415 கோடி ஈட்டிய அல் பலா குழும தலைவர்: 13 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: அல் பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக், பெற்றோர்களையும், மாணவர்களையும் ஏமாற்றி, தவறான வழியில் ரூ.415 கோடி வருமானம் ஈட்டியது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தீவிரவாத டாக்டர்கள் குழு சம்மந்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில், காரில் வெடிமருந்துகளை நிரப்பி மனித வெடிகுண்டாக செயல்பட்ட டாக்டர் உமர் உன் நபி உள்ளிட்டோர் அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவர்கள். இதனால் இந்த பல்கலைக்கழகத்தில் தீவிர விசாரணை நடத்திய டெல்லி காவல்துறை பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்தது.
அதன் அடிப்படையில் அமலா்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்து களமிறங்கியது. நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அல் பலா அறக்கட்டளைக்கு சொந்தமான 25 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முடிவில், அல் பலா குழும தலைவர் ஜாவத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்திக்கை 13 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
அமலாக்கத்துறை சோதனையில், அல் பலா தலைவர் சித்திக் ரூ.415 கோடி வருமானத்தை குற்ற வழியில் ஈட்டிய அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இவர் பெற்றோர் மற்றும் மாணவர்களை மோசடி செய்து மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் பயில பல லட்சம் பணம் வாங்கி உள்ளார். கணக்கில் வராத ரூ.415 கோடியை தவிர மேலும் பல கோடி பணம் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டிருக்கலாம் என அமலாக்கத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. மேலும், வளைகுடா நாடுகளில் சித்திக்கிற்கு நெருங்கிய சொந்தங்கள் இருப்பதால் அவர் அங்கு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை நீதிபதியிடம் எதிர்ப்பு தெரிவித்தது. இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என சித்திக் தரப்பில் வாதாடப்பட்டது. ஆனாலும் விசாரணையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 13 நாள் அமலாக்கத்துறை காவலுக்கு உத்தரவிடுவதாக நீதிபதி கூறினார்.