அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது, சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் : உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி : அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகள் மற்றும் அதற்கு தண்டனை பெற்றுத் தருவதற்கான செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோட்டீஸ்வர் சிங், சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் அமர்வு பிறப்பித்த உத்தரவில், "அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது. சட்டத்துக்கு உட்பட்டு அமலாக்கத்துறை செயல்பட வேண்டும். EDயின் 5,000க்கும் மேற்பட்ட வழக்குகளில் 10க்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை தனது விசாரணையை மேம்படுத்த வேண்டும். குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், வழக்கு விசாரணையே நடத்தாமல் ஆண்டுக்கணக்கில் அந்நபரை சிறையில் வைப்பதில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளீர்கள். மக்களின் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. 5, 6 ஆண்டு சிறையில் இருந்த பின், விடுதலை செய்தால் அவரது இழப்பை யார் சரிகட்டுவது?. சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.