காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் நவ.30க்குள் செயல்படுத்த வேண்டும்: டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தினை வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனம், வன விலங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மார்க் நிர்வாக இயக்குனர் விசாகன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் மது பாட்டில்கள் திரும்ப பெரும் திட்டம் 15 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் பாதி அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர், சேலம், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள 850 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தின் கீழ் 113 கோடியே 81 லட்சம் பாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில், 71 கோடியே 39 லட்சம் பாட்டில்கள் டாஸ்மாக் மூலமாகவும், 40 கோடியே 62 லட்சம் பாட்டில்கள் பார்கள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் 98.09 சதவீதம் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டது. மது உற்பத்தி நிறுவனங்களுடன் கடந்த மாதம் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. மற்ற நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. பாட்டில்களை திரும்ப பெறுவதை சில நிறுவனங்கள் ஒத்துக் கொள்ளவில்லை. சில நிறுவனங்கள் கால அவகாசம் கோரியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது அதில் நிர்வாக ரீதியாக ஏற்படும் சில மாற்றங்கள் செய்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் கால தாமதம் செய்யவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், காலி மது பாட்டில் பெரும் திட்டத்தை செயல்படுத்த மேலும் கால அவகாசம் அளிக்க முடியாது. தமிழகம் முழுவதும் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தினை அனைத்து மாவட்டங்களில் வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் நடைமுறை படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.