விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டங்கள் தமிழ்நாட்டில் பெண்களை தொழில் முதலீட்டாளர்களாக உயர்த்துகிறது
சென்னை: திமுக ஆட்சியின் விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டங்கள் தமிழகத்தில் பெண்களை தொழில் முதலீட்டார்களாக உயர்த்தும் சிறப்பு திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்களை பிற மாநிலங்கள் தற்போது தான் பின்பற்ற தொடங்குகின்றன. தமிழ்நாட்டில் 1971ல் அமைந்த நீதிக் கட்சி அரசும், பெரியார், அண்ணா ஆகியோரின் வழியில் அமைந்த கலைஞர் அரசும் பெண்கள் முன்னேற்றத்திற்கு கல்வி உரிமை அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு உரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடு, பின்னர் அதுவே 50 விழுக்காடாக நடைமுறைபடுத்தப்பட்டமை முதலிய மகத்தான சாதனைகள் இந்தியாவிலேயே நிகழ்த்தப்பட்டன.
2021ல் திமுக அரசு அமைந்த பிறகு மகளிர் சமுதாயம் மேலும் முன்னேற வேண்டும் என்னும் குறிக்கோளுடன் விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமை பெண் திட்டம், மகளிரை தொழில்முனைவோராக்கும் திட்டம் முதலிய புரட்சிகரமான திட்டங்கள் இந்தியாவிற்கே வழி காட்டும் திட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு மகளிர் சமூக விடுதலை பொருளாதார விடுதலை முதலிய அனைத்து வகையிலும் ஆண்களுக்கு சமமாக உரிமைகள் பெற்று படிப்படியாக முன்னேறி வருகின்றனர். இத்திட்டங்களை பிற மாநிலங்கள் தற்போது தான் பின்பற்ற தொடங்குகின்றன.
தமிழ்நாட்டு பெண்கள் நிர்வாக துறையில் மட்டும் அல்லாமல் தொழில்துறையிலும் மகத்தான சாதனைகள் புரிந்து வருகின்றனர். தொழில்துறையில் மகளிர் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர். தமிழ்நாடு பெண்கள் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும், அவர்களுக்கான வேலைவாய்ப்பிலும் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரி மாநிலமாக விளங்குகிறது.
ஒரு சமூகத்தின் உண்மையான வளர்ச்சி என்பது அங்கிருக்கும் பெண்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறார்கள், வாழ்கிறார்கள் என்பதை பொறுத்தது. இந்த வகையில், தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அரசின் கொள்கைகளும் திட்டங்களும் சமூக ஆதரவும் இணைந்து, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலையும், பொருளாதார சுதந்திரத்தையும் உறுதி செய்கின்றன.
முறைப்படுத்தப்பட்ட உற்பத்தி துறையில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்கும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்த துறை, பெண்களுக்கு நிலையான வருமானத்தையும், வேலை பாதுகாப்பையும் வழங்குகிறது. மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்ததாக, முறைசாராத துறைகளில் பெண்கள் பணியாற்றுவதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இது மொத்தத்தில் இந்தியாவின் 9.3% பங்களிப்பை வழங்குகிறது என்று சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களில் 41.4% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது, பெண்கள் தொழில்வாய்ப்புகளை பெறுவதிலும், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக முன்னேற்றம் காண்பதிலும் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை வெளிப்படுத்துகிறது, இது, பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் ஆற்றலை பெற்றுள்ளார்கள் என்பதற்கான முக்கிய ஆதாரம்.
தொழில்துறையில் பெண்களின் இந்த அதிகப்படியான பங்கேற்பு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு பாரபட்சம் இல்லை என்பதையும், அவர்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இது ஒரு பாதுகாப்பான, பாலின சமத்துவம் நிறைந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கும்போது, அவர் குடும்பம் மற்றும் சமூகத்தில் அதிக மரியாதையை பெறுகிறார். மேலும், எந்தவொரு அச்சுறுத்தலில் இருந்தும் தன்னை தற்காத்துக் கொள்ளும் ஆற்றலையும் பெறுகிறார். தமிழ்நாட்டில், அரசு பணியிடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு கணிசமான இடஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. இது, அவர்கள் பணியிடங்களில் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்கிறது.
அதேபோல், பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் போக்சோ சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த சட்டம், பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடச் சூழலை உறுதி செய்வதோடு, புகார் அளிப்பதற்கான வழிமுறைகளையும் எளிதாக்குகிறது. தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் அதிகமாக இருப்பதால், சமூகத்தில் பெண்கள் குறித்த விழிப்புணர்வும் உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு வழங்கும் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் பெண்களின் கல்வி மற்றும் தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கின்றன. பெண்களின் பொருளாதார தடையை தகர்த்து, கல்விக்கான - வேலைவாய்ப்புக்கான - முன்னேற்றத்துக்கான பயணத்தை சாத்தியமாக்கிய ஒரு திட்டம் விடியல் பயணம். விடியல் பயணத்திட்டத்திற்கு அரசு செய்யும் செலவு மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடாக மட்டுமே பார்க்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டம் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவிகளின் இடை நிற்றலை குறைத்து, அவர்களின் உயர்க்கல்வி கனவை சாத்தியாக்கி இருக்கிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் பல லட்சக்கணக்கான மாணவிகள் தங்களது திறனை வளர்த்துக் கொண்டு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளனர்.
நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் காவல்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திட்டங்களான காவலன் செயலி, இரவு நேர கண்காணிப்பு பேட்ரோல் போன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. எதிர்காலத்தில், பெண்கள் சமுதாயம் மேலும் முன்னேற சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி போன்ற ஆய்வு நிறுவனங்களின் பரிந்துரைகள் மிகவும் அவசியமானவை. குறிப்பாக, பெண்களுக்கு தனி கழிப்பறை வசதிகள், எளிதாக அதிக எடையை தூக்க உதவும் உபகரணங்கள், பயண சிரமங்களை சரிசெய்தல் போன்றவை, மேலும் அதிக அளவில் பெண்களை முறைசார்ந்த துறைகளுக்கு கொண்டு வர உதவும்.
தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளனர் என்பது வெறும் ஒரு கருத்து அல்ல. இது, தரவுகளாலும், நடைமுறை முன்னேற்றங்களாலும் நிரூபிக்கப்பட்ட உண்மை. உற்பத்தி துறையில் பெண்களின் பங்களிப்பு, பொருளாதார சுதந்திரம் மற்றும் அரசு வழங்கும் பாதுகாப்பு அம்சங்கள், முதலியவை தமிழ்நாடு பெண்களுக்கான சிறந்த இடமாக இருப்பதை தெளிவுபடுத்துகின்றன.
இதுதவிர வாகனங்கள், மின்சாதனங்கள், ஆடைகள் முதலிய உற்பத்தி துறைகளில் சிறப்பு திறனை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு தன்னை நிரூபித்துள்ளது. அதனுடன், மின்தூக்கிகள் (லிப்ட்) உற்பத்தி துறையிலும் முன்னோடியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 80,000 முதல் 85,000 லிப்ட் தேவைகள் உள்ள நிலையில், இந்தியா சீனாவுக்கு பிறகு மின்தூக்கிகள் (லிப்ட்) மற்றும் நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) பயன்பாட்டில் உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக உள்ளது.
இந்த தேவையில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவை தமிழக உற்பத்தியாளர்களால் நிறைவு செய்யப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் 3 மின்தூக்கிகளில் 1 தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறது. ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 25,000 மின்தூக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. திறமையான தொழிலாளர்களே தமிழ்நாடு மின்தூக்கிகள் உற்பத்தி மையமாக மாறியதற்கு காரணம். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு இந்தியாவை தாண்டி உலகளாவிய மின்தூக்கிகள் உற்பத்தி மையமாக தன்னை மாற்றிக் கொள்ளும் பாதையில் முன்னேறி வருகிறது. இத்தகைய வலுவான செயல்பாடுகள் மூலமாகத்தான் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.