அவர் ஒன்றும் பேரரசர் அல்ல தமிழ்நாட்டை மோடியால் வெல்ல முடியவில்லை: கார்கே ஆவேசம்
புதுடெல்லி: தமிழ்நாட்டை வெல்ல முடியாத மோடி ஒன்றும் பேரரசர் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் கார்கே ஆவேசமாக தெரிவித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றது குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில்,’ படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் நிகழ்வில், அவர் ராஜா போல பிரிட்டிஷ் தொப்பியை அணிந்திருந்தார் என்பது எனக்கு விசித்திரமாக இருந்தது. அவருடன் குஜராத் முதல்வரும் இல்லை, ஒன்றிய உள்துறை அமைச்சரும் இல்லை.
அவர் ஒன்றும் பேரரசர் அல்ல. மற்ற கட்சிகள் பல மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதால் அவர் ஒரு பேரரசர் அல்ல. அனைத்து மாநிலங்களிலும் அவரது கட்சி ஆட்சியில் இருந்தால் தான் மோடி பேரரசர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் பல மாநிலங்களில் அவர் பேரரசர் அல்ல. அவர் தலைமையில் அமைந்துள்ள ஒன்றிய அரசுக்கு கூட பெரும்பான்மை இல்லை. நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவின் ஊன்றுகோலில் அரசாங்கத்தை நடத்துகிறார். நீங்கள் அவரை பேரரசர் என்று அழைக்கிறீர்கள். எனவே தவறுதலாக கூட அவரை பேரரசர் என்று அழைக்காதீர்கள்’ என்றார்.