இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வருவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு; பரமக்குடியில் போஸ்டர்
பரமக்குடி: மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு, தேவேந்திரகுல வேளாளர் சமுதாய அமைப்புகள் மற்றும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் சக்கரவர்த்தி, கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் நேற்று மனு அளித்தார். மனுவில், ‘‘வருகிற 11ம் தேதி சுதந்திர போராட்ட வீரர், தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு நாள். இந்நிலையில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையம் குறித்து தேவேந்திர குல வேளாளர் மக்களின் எண்ணத்திற்கு எதிராக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 60 ஆண்டுகளாக நடந்து வரும் குருபூஜைக்கு இதுவரை அதிமுக தலைமை மரியாதை செலுத்த வந்ததில்லை.
இதனால் தலைமையின் மீது ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில், அவரது கருத்து மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. எனவே எடப்பாடி உள்பட அதிமுகவை சேர்ந்த எந்த நிர்வாகிகளையும் நினைவிடத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். அதிமுக சார்பில் நினைவிடத்திற்கு யாரும் வரும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதற்கு தேவேந்திரர் பண்பாட்டுக் கழக நிர்வாகம் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, செப். 11 நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வரும் அதிமுகவினரை அனுமதிக்கமாட்டோம் என பரமக்குடி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு நிலவுகிறது.