ஈரானில் மீண்டும் போர் மேகம்: இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை
புதுடெல்லி: ஈரானில் மீண்டும் போர் மேகம் சூழ்ந்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள தீவிரமான மோதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த மோதலின் தொடக்கமாக, கடந்த ஜூன் 13ம் தேதி இஸ்ரேல், ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி நிலைகள் மீது குண்டுவீசித் தாக்கியது. இதற்குப் பதிலடியாக, ஈரானும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.
இந்த மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் களமிறங்கிய அமெரிக்கா, ஜூன் 22ம் தேதி ஈரானின் முக்கிய அணு உலைகளான ஃபோர்டோ, நட்டான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது தாக்குதல் தொடுத்தது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதிகள் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 12 நாட்கள் நீடித்த இந்த மோதல், ஜூன் 24 அன்று இஸ்ரேல் போரை நிறுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இந்தப் பின்னணியில், ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் சர்வதேச அணுசக்தி முகமையுடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்கும் சட்டத்திற்கும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்த நடவடிக்கையால் மீண்டும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள இந்தியக் குடிமக்களுக்கு அவசர பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்த சில வாரங்களாக நிலவிவரும் பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, இந்தியக் குடிமக்கள் அத்தியாவசியமற்ற பயணமாக இருந்தால், ஈரான் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஏற்கனவே ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள், அங்கிருந்து வெளியேற விரும்பினால் தற்போது செயல்பாட்டில் இருக்கும் விமானங்கள் மற்றும் படகு சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பிராந்தியத்தில் நிகழும் சமீபத்திய நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்திய தூதரக அதிகாரிகள் வெளியிடும் புதிய ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்’ என்று தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.