இமெயில் மூலம் சினிமா இயக்குநர் மணிரத்னம் நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: காவல்துறை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் சினிமா இயக்குநர் மணிரத்னம், நடிகை திரிஷா, நடிகர் விஷால் ஆகியோர் வீடுகள் மற்றும் சிபிஐ அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் சினிமா இயக்குநர் மணிரத்னம், நடிகை திரிஷா, நடிகர் விஷால் வீடுகள் மற்றும் சிபிஐ அலுவலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை யடுத்து தேனாம்பேட்டை போலீசார் எல்டாம்ஸ் சாலையில் உள்ள மணிரத்னம் வீடு, செனடாப் சாலையில் உள்ள திரிஷா வீடுகளில் சோதனை நடத்தினர். இது வெறும் புரளி என தெரியவந்தது. இதேபோல் அண்ணா நகர் போலீசார் விஷால் வீட்டில் சோதனை நடத்தினர். பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.
அதுவும் புரளி என தெரிந்தது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை மற்றும் அண்ணாநகர், சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் க்ரைம் உதவியுடன் டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.