1 டிரில்லியன் டாலர் சம்பளம்.. உலகின் மிகப்பெரிய சம்பளத்தை வாங்கும் எலான் மஸ்க்.. இந்திய மதிப்பில் எவ்வளவு தெரியுமா?
வாஷிங்டன்: எலான் மஸ்க்குக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ.88 லட்சம் கோடி சம்பளம் வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா நிறுவனம் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்தால், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. டெஸ்லா தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கிற்கு, பல பில்லியன் அமெரிக்க டாலர்களை ஊதியமாக அள்ளி வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, நிறுவன பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர்.
இதன் மூலம் எலான் மஸ்க் தலைமையில் நிறுவனம் நீண்ட கால இலக்குகளை எட்டினால், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.8,86,59,40,00,00,000 கோடி) வாரை சம்பாதிக்க முடியும். இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில், 75 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்குதாரர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உலகில் இதுவரை எந்தவொரு நபரும், இந்த அளவிலான மிகப்பெரிய ஊதிய தொகுப்பை பெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா நிறுவனத்திற்காக எலான் மஸ்கால் நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்ப இலக்குகளை தொடர, நீண்ட காலத்திற்கு அவரை நிறுவனத்தில் தக்கவைக்கவே இந்த பிரமாண்ட ஊதிய தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் 7.5 ஆண்டுகள் தக்கவைக்கப்பட உள்ளார். பங்குதாரர்கள் கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் மஸ்க் அடைந்தால், அவர் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுக்க முடியும்.
இந்த நிகழ்ச்சியில் மேடையேறி அங்கிருந்த ரோபோக்களுடன் சேர்ந்து எலான் மஸ்க் நடனமாடி அசத்தினார். மேலும், “நாங்கள் தொடங்கப் போவது டெஸ்லாவின் எதிர்காலம் குறித்த ஒரு புதிய அத்தியாயத்தை மட்டுமல்ல, ஒரு புதிய புத்தகத்தையும்" தான் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு, செல்ஃப்- ட்ரைவிங் தொழில்நுட்பம் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற துறைகளில் டெஸ்லாவின் முன்னேற்றம் போட்டியாளர்களை விட முன்னணியில் இருக்கும் என்றும் மஸ்க் உறுதியளித்தார். ஏற்கனவே, 500 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சொத்து மதிப்புகளுடன், உலக பணக்காரர்கள் பட்டியலில் மஸ்க் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.