தெப்பக்காடு முகாமில் 50 ஆண்டுகள் நண்பர்களாக வாழும் பாமா, காமாட்சி யானைகள்
ஊட்டி: தெப்பக்காடு யானைகள் முகாமில் பாமா மற்றும் காமாட்சி என்ற இரு யானைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இணை பிரியாமல் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் 75 மதிக்கத்தக்க பாமா என்ற யானையும், 65 வயது மதிக்கத்தக்க காமாட்சி என்ற யானையும் உள்ளன. முகாமில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த 2 யானைகளும் வாழ்ந்து வருகின்றன. பாமா மற்றும் காமாட்சி எப்போதுமே இணை பிரியாமல் ஒன்றாக சுற்றித்திரிவது வாடிக்கை. அனைத்து பணிகளிலும் இருந்து இவைகள் ஓய்வுபெற்றபோதிலும், தற்போதும் மேய்ச்சலுக்கு செல்லும்போதும், உணவிற்காக செல்லும்போதும் இரண்டும் ஒன்றாகவே செல்லும்.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் முகாமில் யானைகளுக்கு கரும்பு, சத்துள்ள உணவு ஆகியவை வழங்கப்படுகிறது. இதனை உட்கொள்ள 2 யானைகளும் ஒன்றாகவே செல்கின்றன. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாமா மற்றும் காமாட்சி யானைகள் வாழ்ந்து வருகின்றன. பல்வேறு பணிகள் மேற்கொண்ட இந்த யானைகள் தற்போது ஓய்வு எடுத்து வருகின்றன. வயது மூப்பின் காரணமாக வெகுதூரம் செல்ல முடியாத இந்த யானைகள் தற்போது முகாம் அருகில் உள்ள மாயார் ஆற்றில் குளிப்பது, அங்குள்ள காடுகளில் மேச்சலில் ஈடுபடுவது, பின் முகாமில் உள்ள உணவு வழங்கும் பகுதிக்கு வந்து உணவு அருந்தி செல்வது போன்றவற்றை மட்டுமே மேற்கொள்கின்றன. ஆனால், 2 யானைகளும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும்’’ என்றனர்.