தேன்கனிக்கோட்டை அருகே காலிபிளவர், நெற்பயிரை சேதப்படுத்திய யானைகள்
*விவசாயிகள் கவலை
தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே, ஒன்னுகுறுக்கை கிராமத்தில் நெற்பயிர், காலிபிளவர், தக்காளி தோட்டங்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தளி பகுதியில் யானைகள் அட்டகாசம் தொடர்கதையாக உள்ளது. தினமும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து தக்காளி, முட்டைகோஸ், நெற்பயிர், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்கின்றன.
இந்நிலையில், கெலமங்கலம் அருகே ஜக்கேரி ஊராட்சி ஒன்னுகுறுக்கை கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு 5 யானைகள் கூட்டம் வெங்கடபதி என்பவர் கேரட் தோட்டம் மற்றும் நெல்வயலில் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. அதேபோல், துரைசாமி என்பவரது காலிபிளவர் தோட்டம் மற்றும் ராமப்பா என்பவரது நெல் வயல், சந்திரேசேகர் என்பவரது ரோஜா தோட்டம் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தின.
அதேபோல், பெட்டமுகிலாளம் கிராமத்தில் நெற்பயிர், தக்காளி தோட்டத்தை நாசம் செய்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு, பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனத்துறை சார்பில் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே இழப்பீடு கொடுக்கிறார்கள். அதுவும் வருடக்கணக்கில் காத்து கிடக்க வேண்டும். இதற்கு அரசு நிரந்தர தீர்வு காணும் வரை, ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்றனர்.