மீண்டும் மீண்டும் கூட்டத்தை பிரிந்து கிராமங்களில் சுற்றித்திரியும் குட்டி யானை: தேன்கனிக்கோட்டையில் ராகியை நாசம் செய்தது
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் கூட்டத்தை பிரிந்த குட்டி யானை கிராமத்திற்குள் புகுந்து ராகி பயிரை நாசம் செய்தது. அதனை காட்டிற்குள் வனத்துறையினர் விரட்டினர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 5காட்டு யானைகள் உள்ளன. யானைகள் அருகில் உள்ள நொகனூர், மரகட்டா, லக்கசந்திரம், மாரசந்திரம், தாவரகரை, அயன்பூரிதொட்டி, ஆலஹள்ளி, கிரியனப்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், வாழை, நெல் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இதனிடையே கூட்டத்திலிருந்து பிரிந்த 4 வயது குட்டி யானை ஒன்று மாரசந்திரம் கிராமத்தில் தனியார் பள்ளி அருகே 2 நாட்களுக்கு முன்பு சுற்றி திரிந்தது. இதைஅறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் குட்டி யானையை காட்டிற்குள் விரட்டி யானை கூட்டத்தில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று குட்டி யானை மீண்டும் மாரசந்திரம் கிராமத்திற்கு வந்து ராகி வயலில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இதைப்பார்த்த கிராம மக்கள் தடி, கம்புகளுடன் குட்டியானையை விரட்டிச்சென்றனர். அப்போது குடியிருப்பு பகுதியில் யானை தஞ்சம் அடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு காட்டிற்குள் விரட்டினர். தொடர்ந்து குட்டி யானையை கண்காணித்து வருகின்றனர்.