கூடலூர் அருகே வீட்டின் மதில் சுவரை உடைத்து பலாப்பழத்தை ருசித்து தின்ற யானை
கூடலூர்: கூடலூர் அருகே வீட்டின் மதில் சுவரை உடைத்து பலாப்பழத்தை ருசித்து தின்ற யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார் அக்ரஹாரம் குடியிருப்பை சேர்ந்தவர் சிவதாஸ். இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். இரவு 11 மணியளவில் குடியிருப்பில் புகுந்த ஒற்றை காட்டு யானை சிவதாஸ் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்து வழியாக வந்து மதில் சுவரை உடைத்து தள்ளி உள்ளே புகுந்தது. யானை மதில் சுவரை இடிக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சிவதாஸ் இது குறித்து வனத்துறைக்கு உடனே தகவல் அளித்தார்.
தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் அங்கு நின்ற யானை அங்கிருந்த பலாமரத்தில் பழுத்திருந்த பழங்களை பறித்து ருசித்து தின்றது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஒரு வழியாக இன்று அதிகாலை 3 மணி அளவில் அப்பகுதியில் இருந்து காட்டு யானை சென்றது. இந்த யானை தொடர்ச்சியாக நகரை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நடமாடி வருகிறது. வனத்துறையினரும் தொடர்ந்து இந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகர் பகுதியில் யானை நடமாட்டம் காரணமாக குடியிருப்பவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.