மின்சார சட்ட திருத்த வரைவு மசோதா மாநில உரிமைகள் பாதிக்காமல் செயல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பல்வேறு திருத்தங்களுடன் மின்சார சட்டத் திருத்த வரைவு மசோதாவை கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த மசோதா ரயில்வே மற்றும் தனியார் உற்பத்தி தொழில்களுக்கான மின்சாரத்தின் விலையை 20 விழுக்காடு குறைப்பதாகவும், வீட்டு நுகர்வோருக்கான மின்கட்டணம் 80 விழுக்காடு உயர்வு ஏற்படுவதற்கும் வழி வகுப்பதாக தமிழ்நாடு மின் பொறியாளர்கள் அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. எவ்வகையான திருத்தங்கள் கொண்டு வந்த போதிலும் ஏழை, நடுத்தர நுகர்வோர்கள் கட்டண உயர்வாலோ, மானிய விலையில் மின்சாரம் பெறும் விவசாயிகள், ஏழைகள், சிறு குறு தொழில் நிறுவனங்களோ பாதிக்கப்படக்கூடாது.மாநில உரிமைகள் பாதிக்காத வகையிலும், மக்களின் நலன்கள் பாதுகாக்கின்ற வகையிலும் ஒன்றிய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்.