தமிழ்நாட்டில் உள்ள 3 கோடி மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஜூலை 31ம் தேதி டெண்டர்
தமிழ்நாட்டில் ரூ.19,235 கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை மின் இணைப்புடன் பொருத்துவதற்கான டெண்டர் வரும் 31ம் தேதி திறக்கப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வீடுகள் உள்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின் இழப்பை தடுக்கவும் ‘ஸ்மாட் மீட்டர்’ பொருத்த அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, 2026ம் ஆண்டிற்குள் அனைத்து மாநிலங்களிலும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறைவேற்றிடவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 3 கோடி மின்நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களின் மின்சார பயன்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த தமிழக அரசும் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் 4 கட்டங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) வெளியிடப்பட்டன. இதில், அதானி நிறுவனம் பங்கேற்று குறைந்த கட்டணமே குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த கட்டணம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பட்ஜெட்டை காட்டிலும் அதிகமாக இருந்ததால், அந்த டெண்டர் கடந்த டிசம்பரில் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்தாண்டு மீண்டும் மார்ச் 14ம் தேதி மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.19,235 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதற்கான டெண்டர் கோரப்பட்டது. குறிப்பாக, சென்னை, வேலூர் மண்டலத்தில் 49.43 லட்சம், கோவை, ஈரோடு மண்டலத்தில் 56.74 லட்சம், கரூர், நெல்லை மண்டலங்களில் 49.98 லட்சம், திருச்சி, தஞ்சாவூர் மண்டலங்களில் 49.77 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் என 6 கட்டமாக பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் ஜூலை 31ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மின்வாரிய அதிகாரி இதுகுறித்து கூறியதாவது:
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ஒரே கட்டமாக பொருத்த திட்டமிட்டிருந்தோம். அதன்படி, மார்ச் 14ம் தேதி அதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் 25ம் தேதி இத்திட்டத்தின் விதிகள் மற்றும் நிபந்தனைகள் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் போன்றவற்றை டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் முழுமையாக புரிந்துகொள்ளும் வகையில் கூட்டங்களை நடத்தினோம். இதில், 300 மேற்பட்ட டெண்டர் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன. பல்வேறு கட்ட கூட்டங்களுக்கு பிறகு டெண்டர் கோரி 4 மாதங்களுக்கு பிறகு வரும் 31ம் தேதி டெண்டரை திறக்க இருக்கிறோம். மேலும், அதற்கான விண்ணப்பங்கள் சமர்பிக்க ஜூலை 30ம் மதியம் 2 மணிவரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒன்றிய அரசின் மேம்படுத்தப்பட்ட விநியோக துறையின் கீழ் (ஆர்.டி.எஸ்.எஸ்) செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கான காலக்கெடு 2028 வரை நீட்டித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
என்ன பயன் ?
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் வீடிற்கு மின் வாரிய ஊழியர்கள் வருவது முடிவுக்கு வரும். மின் வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே நுகர்வோர்களின் மின்சார பயன்பாட்டை ஸ்மார்ட் மீட்டர்கள் கணக்கிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அல்லது இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்க முடியும். மேலும், மாதாந்திர மின் கட்டணமும் நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.