சித்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின் ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் முரளி கிருஷ்ணா பேசியதாவது:எங்களின் முக்கிய கோரிக்கைகளான காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியின் போது உயிரிழந்தால், ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதேபோல் விபத்துக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
ஊழியர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும். பிஎப் நிதி வழங்க வேண்டும் என தொடர்ந்து 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தும், இதுவரை எங்களின் கோரிக்கைகளுக்கு மாநில அரசு செவி சாய்க்கவில்லை.
இதனை கண்டித்து நாங்கள் மாநில முழுவதும் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள மின் ஊழியர்கள் ஒன்றிணைந்து அமராவதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்கும் நடவடிக்கை இல்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
ஆகவே மாநில அரசு உடனடியாக எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட செயலாளர் யுகேந்திரா, பொருளாளர் விவேகானந்தா ரெட்டி, துணை தலைவர்கள் ஜெய்சங்கர், சந்திரசேகர், உறுப்பினர்கள் பத்ரிசன், சந்திர மவுலி, லோகநாதன், ரஜி சாகிப், தேவசகாயம் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சித்தூர் விஜயா பால் பண்ணை பகுதியில் இருந்து பேரணியாக நடந்து சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.