மின் இணைப்பு பெட்டிகளால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க 3,362 இடங்களில் பாதுகாப்பு வலை: துணை முதல்வர் உத்தரவால் ரூ.113.51 கோடியில் நடவடிக்கை
தமிழகத்தில் விரைவில் மழை காலம் தொடங்க உள்ளது. தற்போது மாநிலத்தில் பல இடங்களில் மழை கொட்டி வருகிறது. சென்னையில் கடந்த வாரம் கூட மழை நீரில் மின்சார வயர் அறுந்து விழுந்ததால் தூய்மைப்பணியாளர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மழை காலங்களில் மின்சார பாதிப்பினால் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பல இடங்களில் சாலைகளில் மின் இணைப்பு பெட்டிகள் இருப்பதும், அவைகள் திறந்து இருப்பதால், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதும் தெரிய வந்துள்ளது. அதை தடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து சென்னை நகரில் உள்ள மின் இணைப்பு பெட்டிகளை பாதுகாப்பது குறித்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நகர் முழுவதும் ஆய்வு செய்ததில் 3362 இடங்களில் மின் இணைப்பு பெட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோரின் தொடர் நடவடிக்கைகளின் வாயிலாக, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள மின்மாற்றிகளைச் சுற்றிலும் மக்களுக்கு ஆபத்தின்றி பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையிலும், குப்பை தேக்கமின்றி முறையாக பராமரித்திடும் வகையிலும் ரூ.113.51 கோடி ஒதுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, 3,362 இடங்களில் பல்வேறு வடிவமைப்புகளில் அழகான தோற்றத்துடன் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைத்திடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மின் இணைப்புப் பெட்டிகளிலும் உரிய பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு பாதுகாப்பாக மின்பெட்டிகளை அமைத்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் மின்வாரியத்தின் வாயிலாக சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படுவதோடு மின் பெட்டிகளைச் சுற்றிலும் மாநகராட்சியின் சார்பில் பாதுகாப்பு கட்டமைப்புகள் உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக இப்பணிகள் அனைத்தையும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு துணை முதல்வரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் நடவடிக்கைகளின் ஒன்றாகவும், மக்களுக்கு பாதுகாப்பினை ஏற்படுத்தி மின்மாற்றிகளையும், மின் இணைப்புப் பெட்டிகளையும் சிறப்பாகப் பராமரிப்பதற்கும் வழிவகை ஏற்பட்டு மக்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக அமைந்திடும்’’ என்று தெரிவித்தனர்.
* பொது இடங்களில் உள்ள மின் இணைப்புப் பெட்டிகளால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்கும் விதமாக ரூ.113.51 கோடி மதிப்பீட்டில் 3,362 இடங்களில் பாதுகாப்பு கட்டமைப்பு ஏற்படுத்தும் பணிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.