மின்சார ரயில்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கவாச் கருவி பொருத்தப்படும் :மேற்கு ரயில்வே திட்டவட்டம்
டெல்லி : மின்சார ரயில்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கவாச் கருவி பொருத்தப்படும் என மேற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. ரயில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் கவாச் கருவி பொருத்தப்படுகிறது. கவாச் கருவி என்பது ரயில்களில் பாதுகாப்பு அம்சத்தை திறன்பட மேற்கொள்ள இந்திய ரயில்வேயால் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கருவியாகும். தானியங்கி கருவியான கவாச் இந்திய ரயில்களில் ஏற்படும் விபத்துகளை முன்கூட்டியே அறிந்து தடுக்கும் திறன் கொண்டது.
ரயில் பைல்ட்டின் கட்டுப்பாட்டை மீறி ரயில் இயங்கும் நேரத்தில் விபத்துகளைத் தடுக்கவும், மோதல்கள் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக, தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்தும் சிறப்பு அம்சம் கவாச் கருவியில் உள்ளது. மேலும், கவாச் கருவியின் கூடுதல் முக்கிய அம்சங்களாக தானியங்கி பிரேக்குகள், மூடுபனிக் காலங்களில் ஏற்படும் பார்வை குறைபாடு, அதிவேகம், எல்ஜின் டிரைவருக்கும், கார்டுக்கும் இடையிலான தகவல் தொடர்பு உள்ளிட்ட நிலைகளை துல்லியமாக கொண்டு செல்லும் பணிகளை கவாச் கருவி மேற்கொண்டு வருகிறது.
தற்போது இந்த தொழில்நுட்பம் பெரும்பாலும் நீண்ட தூர ரயில்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மேற்கு ரயில்வே வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கவாச் கருவி பொருத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவாச் கருவியை பொருத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளதாகவும் 2026ம் இறுதிக்குள் மேற்கு ரயில்வேயில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் கவாச் கருவி பொருத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.