சென்னையில் 2வது ஏசி மின்சார புறநகர் ரயில் சேவை ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் என தகவல்!!
சென்னை : சென்னையில் 2வது ஏசி மின்சார புறநகர் ரயில் சேவை ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை புறநகர் ரயில் சேவையில் முதல் ஏசி மின்சார ரயில் சென்னை தாம்பரம் -செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும்.இந்த நிலையில், சென்னை புறநகர் ரயில் சேவையில் 2வது ஏசி மின்சார ரயில் சேவையை தெற்கு ரயில்வே ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இந்த சேவையை தொடங்க திட்டமிட்டுள்ள தெற்கு ரயில்வே, விரைவில் இதற்கான சோதனையை தொடங்கும் என்றும் தெரிகிறது. அதே கட்டணம் வசூல் செய்யப்படுவதால், முதல் ஏசி ரயில் சேவையே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. விமான நிலையம் திரிசூலம் முதல் எழும்பூர் வரை ஏசி மின்சார புறநகர் ரயிலில் ரூ. 60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சாதாரண மின்சார புறநகர் ரயிலில் ரூ. 5 , சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.32 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 40,000 பயணிகள் மட்டுமே ஏசி மின்சார ரயிலில் பயணிக்கின்றனர். இதில் முழு பயணிகள் இருக்கையில் 10% மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.