தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததால் மோதல்; உத்தரபிரதேச பாஜக துணை முதல்வர் மாயம்..? யோகியை ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பதால் பரபரப்பு
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பெரும் வெற்றிக் கனவை உத்தரபிரதேச மாநிலம் சிதைத்தது. மொத்தமுள்ள 80 இடங்களில் 33 இடங்களை மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. உத்தரபிரதேசத்தில் போட்டியிட்ட ஒன்றிய, மாநில அமைச்சர்களும், பிரபலங்களும் தேர்தலில் தோல்வியடைந்தனர். ராமர் கோயில் இருக்கும் அயோத்திக்கு உட்பட்ட தொகுதியிலும் கூட பாஜக தோல்வியை சந்தித்தது. கடும் பின்னடைவை பாஜக சந்தித்ததால், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது மற்ற சகாக்கள் மீது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. மாநில பாஜகவில் பெரும் புகைச்சல் எழுந்துள்ள நிலையில், அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை காணவில்லை.
இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று உத்தரபிரதேசம் வந்தார். அவர் இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், யோகியை மோகன் பகவத் சந்திப்பது மேலும் பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. தேர்தலுக்கு பின்னர் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா மாயமான நிலையில், யோகியை மோகன் பகவத் சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மவுரியாவை காணவில்லை என்றாலும், அவர் இதுவரை எந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக, யோகி ஆதித்ய நாத் தலைமையில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திற்கும் மவுரியா வரவில்லை.
மவுரியாவுக்கும் முதல்வர் யோகிக்கும் இடையேயான உறவில் அவ்வப்போது விரிசல் ஏற்பட்ட நிலையில், இப்போது அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரபிரதேச முதல்வராகும் ஆசையில் இருக்கும் கேசவ் பிரசாத் மவுரியா, முதல்வர் யோகிக்கு எதிராக பாஜக தேசிய தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். மவுரியா டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் மீண்டும் அவர் உத்தரபிரதேச மாநில பாஜக தலைவராகலாம், அல்லது உத்தரபிரதேச அரசில், அவருக்கு முக்கிய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேநேரம் மோகன் பகவத் முதல்வர் யோகியை சந்திப்பதற்கான காரணம் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பேசிய மோகன் பகவத், மோடியை ஆணவம் மிக்க நபராக சுட்டிக்காட்டி பேசினார்.
அதேபோல் ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகி இந்திரேஷ் குமாரும், பாஜகவை திமிர்பிடித்த கட்சி என்றும், அந்த கட்சி 241 இடங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் கூறினார். ஆர்எஸ்எஸ் தலைவர்களின் அடுத்தடுத்த பேச்சை பார்க்கும் ேபாது, பாஜக - ஆர்எஸ்எஸ் இடையிலான மனக்கசப்பு அம்பலமானது. இந்த நேரத்தில் யோகியை மோகன் பகவத் சந்திப்பது, பாஜக தலைமையை சமாதானப்படுத்தவா? அல்லது மோதலை முடிவுக்கு கொண்டு வரவா? அல்லது உத்தரபிரதேசத்தில் தலைமை மாற்றத்தை ஏற்படுத்தவா? என்பது குறித்து பேசப்படுகிறது. எனவே வரும் நாட்களில் உத்தரபிரதேச பாஜகவில் திடீர் அரசியல் மாற்றங்கள் நிகழலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.