மாநில பார்கவுன்சில்களில் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்: அகில இந்திய செயலாளர் அறிவுறுத்தல்
சென்னை: தேர்தல் நடத்தப்படாத மாநில பார்கவுன்சில்களில் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று அகில இந்திய பார்கவுன்சில் மாநில பார்கவுன்சில் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அகில இந்திய பார்கவுன்சில் முதன்மை செயலாளர் ஸ்ரீமந்த்ரோ சென் அனைத்து மாநில பார்கவுன்சில் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் அகில இந்திய பார்கவுன்சில் விதிகளின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படாத மாநில பார்கவுன்சில்களின் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தொடங்க வேண்டும்.
பார்கவுன்சிலில் பதிவு செய்த மொத்த வழக்கறிஞர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் எத்தனை வழக்கறிஞர்கள் உள்ளனர், சரிபார்ப்பு நிலுவையில் உள்ள வழக்கறிஞர்களின் எண்ணிக்கை, வாக்களிக்க தகுதியான வழக்கறிஞர் உள்ளிட்ட விவரங்களை உடனடியாக அகில இந்திய பார்கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும். வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பூர்வாங்க நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும்.
வழக்கறிஞர்கள் சட்டப்படி மாநில பார்கவுன்சில் நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு பெற முடியும். எனவே, பதவி காலம் முடிந்த மாநில பார்கவுன்சில்கள் அந்தந்த பார்கவுன்சில்களின் கள நிலவரங்களின் அடிப்படையில் விரைவில் தேர்தல் குறித்த அறிவிப்பை வௌியிட வேண்டும். இது தொடர்பான விரிவான அறிக்கையை ஆகஸ்ட் 10ம் ேததிக்குள் அகில இந்திய பார்கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.