தேர்தல் போஸ்டரில் படத்தை போடாமல் லாலுவின் பாவங்களை மறைக்க தேஜஸ்வி யாதவ் முயற்சிக்கிறார்: பீகாரில் பிரதமர் மோடி பேச்சு
கதிஹார்: ‘தேர்தல் போஸ்டர்களில் படத்தை மூலையில் போட்டு, லாலுவின் பாவங்களை மறைக்க தேஜஸ்வி யாதவ் முயற்சிக்கிறார்’’ என பீகார் பிரசாரத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக வரும் 6 மற்றும் 11ம் தேதிகளில் நடக்க உள்ளது. முதற்கட்டமாக வரும் 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ள 121 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி கதிஹார், சஹர்சா மாவட்டங்களில் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அதில் அவர் பேசியதாவது: காட்டு ராஜ்ஜியத்தின் இளவரசர் (தேஜஸ்வி யாதவ்வை குறிப்பிடுகிறார்), பெரிய தலைவர் என கூறிக் கொள்ளும் பல ஆண்டுகள் முதல்வராக இருந்த உங்கள் சொந்த தந்தையின் புகைப்படத்தை கட்சியின் தேர்தல் போஸ்டர்களில் காட்டாமல் இருப்பதன் மூலம் என்ன பாவத்தை மறைக்கப் பார்க்கிறீர்கள்?ஒருவேளை, காட்டு ராஜ்ஜியத்தின் பெரும் சுமையை அந்த பெரிய தலைவர் சுமக்கிறார் என்பதை இளவரசர் அறிந்திருக்கலாம். பீகாரில் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம் ராஷ்டிரிய ஜனதா தளத்தை கட்டுப்படுத்துகிறது, நாட்டிலேயே மிகவும் அதிக ஊழல் நிறைந்த குடும்பத்தால் காங்கிரஸ் வழிநடத்தப்படுகிறது.
இந்த தேர்தலில் தனது கூட்டணி கட்சி தோற்கடிக்கப்பதை உறுதி செய்ய காங்கிரஸ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. அவர்களின் கூட்டு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் விலகி நிற்கின்றனர். அதற்கெல்லாம் ஆர்ஜேடி தான் விளக்கம் தர வேண்டும் என்கின்றனர். பீகாரிகளை ஏளனம் செய்வதில் பெயர் பெற்ற தெலங்கானா, தமிழ்நாட்டின் முதல்வர்களை இங்கு பிரசாரத்திற்கு அழைத்து வருகிறார்கள். இது பீகார் மக்களிடம் ஆர்ஜேடிக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தும். இதனால் அக்கட்சி தேர்தலில் தோல்வி அடையும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது.
2005ம் ஆண்டு பீகாரில் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, ஆர்ஜேடி மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. பீகாரில் நிதிஷ் குமார் புதிய அரசாங்கத்தை அமைத்ததால் ஆர்ஜேடி மிகவும் கோபமடைந்தது. எனவே, மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்திக்கு அழுத்தம் கொடுத்து பீகாரில் அனைத்து நலத்திட்டங்களையும் முடக்கியது. அவர்கள் செய்த பாவங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் நீங்கள் அவர்களைத் தண்டிக்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
* இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது
பீகாரில் தேர்தல் தேதி கடந்த மாதம் 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்தன. இந்நிலையில் முதல் கட்டமாக தேர்தல் நடக்க உள்ள 121 தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.