தேர்தல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரதிநிதிகளுடன் ஆலோசனை: தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் நேற்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் அதைப் பிரித்து வாக்குச்சாவடி மறுசீரமைப்பு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 3,718 வாக்குச்சாவடிகளில் 1,200க்கும் அதிக வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, புதிதாக 353 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது, வாக்குச்சாவடி மறுசீரமைப்புக்குப் பின் 4,071 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளன. மேலும், கட்டட மாற்றம், பெயர் மாற்றம், வாக்குச்சாவடிகள் இணைப்பு மற்றும் வாக்குச்சாவடிகள் பிரிப்பு உள்ளிட்ட பணிகளும் இந்தப் பணிகளின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.