தேர்தல் ஆணையத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு மீது மறைமுக தாக்குதல்: வீடியோ வெளியிட்டு திமுக கடும் கண்டனம்
சென்னை: தேர்தல் ஆணையத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு மீது பாஜ மறைமுக தாக்குதல் நடத்துகிறது என்று திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக தலைமை கழகம் தனது சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எஸ்ஐஆர் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அபாயச் சூழல் வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு மீது பாஜ மறைமுக தாக்குதல் நடத்துகிறது. நமது வாக்குரிமையைக் காக்க அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது. எஸ்.ஐ.ஆர். படிவங்களைப பூர்த்தி செய்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய களத்தில் திமுக நிற்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கரம் கோர்த்து நின்று சதிகார சக்திகளின் சதிவலைகளை அறுத்திடுவோம்; ஜனநாயக உரிமையைக் காத்திடுவோம்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், எஸ்ஐஆர் மூலமாக வாக்காளர் பெயர் நீக்கப்படுவது தொடர்பான வீடியோ பதிவையும் திமுக வெளியிட்டுள்ளது. அதில், ‘எஸ்ஐஆர் உங்கள் குரலை ஒடுக்க பாஜவின் ஆயுதம். தமிழ்நாட்டோட 6.36 கோடி வாக்காளர்களும் இப்போ ஆபத்தில் இருக்கிறார்கள். இந்த சம்பவங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன மாதிரி விழிப்போடு இருந்து உங்கள் ஓட்டை பாதுகாக்க வேண்டிய நேரம் இது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று கூறப்பட்டுள்ளது.