தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து பாஜ வென்றுள்ளது வாக்குகளை திருடுவதே குஜராத் மாடல்: பீகாரில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
முசாபர்நகர்: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யை நடத்தி வருகிறார். யாத்திரையின் 11வது நாளான நேற்று முசாபர்நகர் மாவட்டத்தில் ராகுல் காந்தியும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்வும் பேரணி சென்றனர். ராகுலுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய யாத்திரையில் பங்கேற்றார்.
பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது: வாக்குகளை திருடுவது தான் குஜராத் மாடல். குஜராத் முதல்வராக மோடி இருந்த போதிலிருந்து அங்கு வாக்குகள் திருடப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் இருந்து தான் வாக்குகளை திருட பாஜ ஆரம்பித்தது. தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து வாக்குளை திருடித்தான் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜவும் மோடியும், அமித்ஷாவும் வெற்றி பெறுகின்றனர். அவர்கள் சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் எப்படி வாக்குகளை திருடி வெற்றி பெற்றார்கள் என்பதற்கான ஆதாரங்களை நாங்கள் தொடர்ந்து வெளியிடுவோம்.
பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது. அவர்கள் இறந்து விட்டார்கள், முகவரி மாறிவிட்டார்கள், காண முடியவில்லை என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களின் பெயர் தவறாக நீக்கப்பட்டிருப்பதாக எங்களிடம் புகார் கூறுகின்றனர். உயிருடன் இருக்கும் பலரும் இறந்து விட்டதாக தேர்தல் ஆணையத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த பணக்காரரின் பெயரையும் தேர்தல் ஆணையம் நீக்கவில்லை. எதற்காக 65 லட்சம் பேரை நீக்கியது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் தர வேண்டும் என்றார்.
* ராகுலுடன் பைக்கில் பயணித்த பிரியங்கா
யாத்திரை தர்பங்கா மாவட்டத்தில் இருந்து நேற்று முசாபர்நகருக்குள் நுழைந்த போது, ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் பைக் ஓட்டிச் சென்றனர். அப்போது, ராகுலின் பைக்கில் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி அமர்ந்து பயணித்தார். வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் சாலையின் இருபுறமும் குவிந்து ராகுல், பிரியங்காவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.