நாடு முழுவதும் 50% வாக்காளர்கள் தங்கள் பிறப்பிடம், பிறந்த தேதி குறித்த ஆவணங்கள் தர தேவையில்லை : தேர்தல் ஆணையம்
டெல்லி : பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் படிப்படியாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலமாக இதனை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 50% வாக்காளர்கள் தங்கள் பிறப்பிடம், பிறந்த தேதி குறித்த ஆவணங்கள் தர தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகஇந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், "2002-2008 வரையிலான காலகட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடந்த முறை நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது பட்டியலில் இடம்பிடித்தவர்கள் ஆவணம் தர தேவையில்லை.
கடைசியாக 2003ம் ஆண்டு பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2003 வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்படி பீகாரில் 60% வாக்காளர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க அவசியம் இல்லை. பீகாரில் 40% வாக்காளர்கள் பிறப்பிடம், பிறந்த தேதி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை வெளியிட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்டு, ஆதார் எண்ணை 12வது ஆவணமாக சேர்த்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.