தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடக்காது: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
தஞ்சாவூர்: சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டலம் சார்பில் ரூ.4கோடியே 70 லட்சம் மதிப்பிலான 5 புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியால் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. கல்லூரி செமஸ்டர் தேர்வு என்பது பல்கலைக்கழகத்தால் வரையறுக்கப்பட்ட விஷயம். இதனை தேர்தல் ஆணையம் நன்கு அறியும். எனவே விடுப்பு காலங்களில் தான் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.