தேர்தல் நேரத்தில் கட்சிக்கு துரோகம்: லாலு கட்சியை சேர்ந்த 27 தலைவர்கள் 6 ஆண்டுக்கு நீக்கம்
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்ட 27 தலைவர்களை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக முக்கிய தலைவர்கள் நீக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. முன்னதாக கடந்த மே மாதம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி உத்தரவிட்டார்.
அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு எதிராக தற்போது பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் பீகாரில் சட்டமன்ற முதல்கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 27 தலைவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆறு ஆண்டுகளுக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து கட்சி மேலிடம் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டதாலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும், முன்னாள் எம்எல்ஏ, மாவட்ட நிர்வாகிகள் என 16 தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், முக்கியப் போட்டியாளரான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் சமீபத்தில் தங்களது கட்சியைச் சேர்ந்த 16 தலைவர்களைக் கட்சி விரோதச் செயல்பாடுகளுக்காக நீக்கியது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரத்தில் கட்சியில் ஒற்றுமையையும், விசுவாசத்தையும் நிலைநிறுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.