நாடாளுமன்றத்திற்கே உச்சபட்ச அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு கிடையாது: சபாநாயகர் அப்பாவு பேட்டி
நெல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு இன்று அளித்த பேட்டி: அண்ணா காலத்தில் இருந்தே இருமொழி கொள்கை தான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. மும்மொழி கொள்கைக்கு இங்கு இடமில்லை. பிளஸ் 1 பொதுத்தேர்வு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றபடி காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும். இதனால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி 3, 5, 8ம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெற்றால் தான் மேல்படிப்புக்கு செல்ல முடியும். இல்லையென்றால் அவர்கள் சொந்த தொழிலுக்கு தான் செல்ல முடியும். ஆனால் மாநில அரசின் கல்வி கொள்கை சாமானிய மக்களும் கல்வி கற்கக்கூடிய நிலையில் உள்ளது.
ஒன்றிய அரசின் ஐஐடி போன்ற தேர்வுகளில் உயர் சாதியினர் குருகுல கல்வியை பயின்றால் உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. அவர்களுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி வரை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாமர மக்கள் தான் மிகவும் கஷ்டப்படுகின்றனர். நாடாளுமன்றத்திற்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. தேர்தல் கமிஷனுக்கு கிடையாது. ஒரு குற்றச்சாட்டை ஒருவர் சொல்லும் போது அது உண்மையா, பொய்யா என்பதை நிரூபிக்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வது தவறு. தேர்தல் கமிஷன் இதுபோன்ற தவறுகளுக்கு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.