தேர்தல் ஆணையமா? திருட்டு ஆணையமா?.. மு.தமிமுன் அன்சாரி காட்டம்
சென்னை: தேர்தல் ஆணையமா ? திருட்டு ஆணையமா? களவாடப்பட்டது ஜனநாயகம் மட்டுமல்ல, நாட்டு மக்களின் மனசாட்சியும் என்பதை மறந்து விடக் கூடாது என மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; நேற்று முன்தினம் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுகள் குறித்து நடத்திய ஊடக சந்திப்பு என்பது இந்தியாவை உலுக்கி இருப்பதோடு; உலகம் எங்கும் பாரிய அளவிலான கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. உலகின் சிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று என போற்றப்பட்டு வந்த இந்தியாவின் ஜனநாயகமே இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த அவல நிலைக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் ஃபாசிச ஆதரவு போக்குகளே காரணமாகும். பீஹாரில் 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ' என்ற பெயரில்;
ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி; 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டபோது அதனை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது நாடு முழுக்க விவாதமானது. தற்போது கர்நாடகாவில் மகாதேவ்புரா சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்து 250 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்ம், இதில் 11,965 வாக்களர்களின் பெயர்கள் இரு முறை பதிவாகியுள்ளதாகவும், அதில் 40,009 வாக்களர்களின் முகவரிகள் போலியானவை என்றும், 10,452 வாக்காளர்கள் குறிப்பிட்ட ஒரே முகவரியில் இருப்பதாகவும், 4132 வாக்காளர்களின் புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் ஆதாரப்பூர்வமாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அம்பலப்படுத்தி இருப்பது அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது.
ஒரு வீட்டில் உள்ள சிறிய அறையில் 80 வாக்காளர்களின் வாக்குரிமை பதிவுகள் இருப்பதும், ஆதித்யா ஸ்ரீ வத்ஸ்சவா என்ற ஒரே வாக்காளருக்கு கர்நாடகாவில் மகாதேவ்புரா தொகுதியில் இரண்டு இடத்திலும், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ கிழக்கு தொகுதியில் ஒரு இடத்திலும், மகாராஷ்டிரா மாநிலம் ஜோகேஸ்வரி கிழக்கு தொகுதியில் ஒரு இடத்திலும் என நான்கு வெவ்வேறு இடங்களில் வாக்குரிமை இருப்பதற்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ,அரியானா மாநிலங்களில் இது போன்ற பல ஜனநாயக மோசடிகள் நடைபெற்று, அங்கு தேர்தல் முடிவுகள் களவாடப்பட்டிருப்பதையும் ராகுல் காந்தி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதனால் நாடு முழுக்க 100 நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டு இருப்பதை ஆதாரப்பூர்வமாக அவர் அம்பலப்படுத்தி இருப்பதை அலட்சியப்படுத்த முடியாது. அதாவது 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி களவாடப்பட்டு ; டெல்லியில் ஒரு திருட்டு ஆட்சி அமைய தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறதா? என்ற கேள்விக்கு நேர்மையான பதிலை இந்த தேசம் எதிர்ப்பார்க்கிறது. தேர்தல் ஆணையமா? திருட்டு ஆணையமா? என்ற விவாதங்கள் ஏற்பட்டிருப்பது நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஒரு தலைகுனிவாகும். டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட மறுப்பதும், வீடியோ ஆதாரங்களை அழிக்க நினைப்பதும் தேர்தல் ஆணையத்தின் நேர்மையின் மீது மலர்வளையத்தை வைக்கிறது .
உலகிலேயே இரண்டாவது மக்கள் தொகை கொண்ட; பன்முக சமூக அமைப்புகளை கொண்ட ஒரு ஜனநாயக தேசத்தில்; நேர்மையாக தேர்தல் நடைபெறுவதை அதற்கு பொறுப்பாளராக இருக்கும் தேர்தல் ஆணையமே தடுத்து நிறுத்துவது என்பது இந்த தேசத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது._அரசியல் பேதங்களைக் கடந்து இந்தியாவின் உயிர்ப்பான ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பொதுமக்கள் களத்தில் இறங்கி போராட வேண்டிய நேரம் இது. இப்போது போராடாவிட்டால் இந்தியாவின் எதிர்காலம் இருள்மயமாவதை எவராலும் தடுக்க முடியாது. ஏனெனில் களவாடப்பட்டது இந்தியாவின் ஜனநாயகம் மட்டுமல்ல. நாட்டு மக்களின் மனசாட்சியும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என்று கூறியுள்ளார்.