நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம்; செப்.10ல் தேர்தல் ஆணையம் ஆலோசனை: மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நாடு தழுவிய அளவில் செயல்படுத்துவதற்கான தயார்நிலை குறித்து தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் செப்.10ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர். பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு சுமார் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பீகார் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்காக வரும் புதன்கிழமை(செப்.10) தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்குவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கு வசதியாகத்தான் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் செப்.10 அன்று நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
பிப்ரவரியில் ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு அவரது தலைமையில் நடக்கும் மூன்றாவது மாநில தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் இது ஆகும். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான தயார்நிலை குறித்து விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.