2026 தேர்தலுக்கு பிறகு பாஜ காணாமல் போகும்: அமைச்சர் ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: எஸ்ஐஆர் குறித்து வரும் 2ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வர் முடிவு செய்துள்ளார். அதில் அனைத்து கட்சிகளின் கருத்துக்களும் பதிவு செய்யப்படும். அதன் பிறகு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை ஒட்டு மொத்தமாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க தேர்தல் ஆணையத்தின் மூலமாக ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. இதை எந்த காலத்திலும் திமுக ஏற்காது. பீகாரிலும் இது போன்று நடந்துள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு நாம் வீடு, ரேஷன் பொருட்கள் அனைத்தும் கொடுத்து வருகிறோம். ஆனால் அவர்களுக்கு இங்கு குடியுரிமை கிடையாது. ஒரு வாக்காளர் இந்திய குடிமகனா, இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது
இந்திய குடியுரிமை சட்டம் 1955. ஆனால் இந்திய குடிமகனா, இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒட்டுமொத்தமாக நமது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள். அவர்களுக்கு சில கட்டளைகள் வரும்பொழுது அவற்றை பின்பற்றக்கூடிய சூழ்நிலை வருகிறது. எப்படிப்பட்ட ஆணைகளை தேர்தல் ஆணையம் சொல்லும் என்பது தெரியாது. தேர்தல் ஆணையம் தவறான விஷயங்களை சொல்லிவிட்டால் அதிலிருந்து பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்திலிருந்து கோடிக்கணக்கில் வந்துள்ளது. அதனால் தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை, ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாதவர்களை எல்லாம் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து. 2026 தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் பாஜ காணாமல் போகும். மீண்டும் திமுகவின் 2.0 தொடரும். விஜய் வெறுப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பொதுமக்கள் மத்தியில் திமுக மீது எந்த ஒரு வெறுப்பும் இல்லை. விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படும் போது அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.தலைவர் பதவியை தக்க வைப்பதற்காக நயினார் நாகேந்திரன் எதையோ பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.