தேர்தலுக்கு முன்பு மாற்றுக்கட்சிக்கு தாவ ரெடியாகி வரும் நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையால் யூனியனில் அரசியல் புள்ளிகள் கதிகலக்கத்தில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மதுவுக்கு பெயர்போன யூனியனில் தற்போது மருந்து பேச்சுதான் ஓடுகிறதாம்.. ஏழைகள் நம்பி வாங்கும் மாத்திரைகளின் தரத்தில் நடந்த முறைகேடு மீது லஞ்ச ஒழிப்பு காக்கிகள் எடுத்த அதிரடி கைது நடவடிக்கையால் சுக்குநூறாக உடைந்து கிடக்கிறார்களாம் சுகாதாரமான பணியாளர்கள். கறைபடியா துறையாக விளங்கிய சுகாதாரத்தை தற்போது கவனிப்பது புல்லட்சாமிதானாம்..
பவர்புல் நிர்வாகியை முறைத்துக் கொண்டதன் விளைவுதான் இதற்கு முக்கிய காரணமாம்.. விசாரணை வளையம் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரும் நிலையில், சில அரசியல் புள்ளிகளிடம் பயத்தின் புயல் வீசுகிறதாம்.. சூறாவளியாக லஞ்ச ஒழிப்பு காக்கிகள் தொடர் நடவடிக்கைக்கு திட்டமிட அதிகாரமிக்க விஐபிக்களும் கதிகலக்கத்தில் உள்ளார்களாம்.. கடந்த காலங்களில் தரமற்ற மருந்துகள் மட்டுமின்றி சில ஒப்பந்தங்களை வழங்கியதிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற ஐயத்தை பொதுநல அமைப்புகள் கிளப்பி சிபிஐ விசாரணை கேட்டு வருகிறார்களாம்..
இதுபற்றிதான் யூனியன் முழுக்க பேச்சு ஓடுது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘என்றாவது ஒருநாள் நாம் நினைத்த பதவி கிடைக்காமலா போகும் என்ற ஆவலோடு ரத்தத்தின் ரத்தங்கள் காத்திருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரின் சொந்த ஊரில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் மொரப்பூரை சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவர் வந்த வேகத்தில் அதிரடி காட்டியதுடன் புதுப்புது நிர்வாகிகளை கொண்டுவந்து, ரெண்டாங்கட்ட நிர்வாகிகளை கதிகலங்க வைத்தார்..
இதனால் ஷாக்கான அவர்கள், மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இவர் மட்டும் ஏன் இங்கேயே நங்கூரமாக கூடாரம் போட்டு இருக்காரு என்ற பெருங்கோபத்தில் இருக்காங்களாம்.. இதே கோரிக்கையோடு சென்னை புறநகர் இலைக்கட்சி ரத்தத்தின் ரத்தங்களும் இருக்காங்களாம்.. அதே நேரத்தில் புதிய மா.செ. பொறுப்பேற்றிருக்கும் நிலையில் அவரை எப்போது காலி செய்யலாம் என்ற திட்டத்தோடு அவருடன் இருப்பவர்களும் திண்ணை எப்போது காலியாகும் என்ற ஆசை கனவோடு இருக்காங்களாம்..
இதற்கிடையில் இன்னும் ஒரே வாரத்தில் மா.செ. மாற்றப்படுவார்கள் என கூறும் அவர்கள், 5 புதிய மா.செ. பட்டியலையும் வெளியிட்டு ரொம்பவே ஹேப்பியா இருக்காங்களாம்.. ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்பதோடு அவர்கள் கனவு கனவாகத்தான் இருக்க போகுதுன்னும் ஒரு கோஷ்டியினர் சொல்றாங்க.. புதுசா போட்ட 130 வட்ட, பகுதி செயலாளர்கள் என யாருடைய பதவியையும் இனிமேல் பறிக்க திட்டம் ஏதும் இல்லையாம்.. அனைத்து சார்பு அணிகளில் உள்ள காலியாக இருக்கும் இடங்களை மட்டும் நிரப்ப இலைக்கட்சி தலைவர் உத்தரவு போட்டிருக்காராம்..
அதே நேரத்தில் புதியவர்களில் 16 வட்ட செயலாளர்களின் வேலை திருப்தி இல்லையாம்.. குலைதள்ளும் வாழைக்கு முட்டுக்கட்டை கொடுப்பது போல அவர்களுக்கு துணையாக அனுபவம் உள்ள நிர்வாகிகளை போட்டு தாங்கிபிடிக்க போறதாகவும் தகவல் கசிஞ்சியிருக்கு.. இதனால் மா.செ. உள்ளிட்ட பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்போர் ரொம்பவே வேதனை அடைஞ்சியிருக்காங்களாம்.. என்றாவது ஒரு நாள் நாம் நினைத்த பதவி கிடைக்காமலா போகும் என்ற ஆவலோடு தான் இருக்காங்களாம் பொறுப்பாளரின் எதிர்க்கோஷ்டியினர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குக்கர் தலைமையானவர் மீதான அதிருப்தியில் தேர்தலுக்கு முன்னாடி மாற்று கட்சிக்கு தாவ நிர்வாகிகள் முடிவு செஞ்சிட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குக்கர் கட்சி தலைமையானவரை நம்பி வந்த மன்னர் மாவட்ட முதல் கட்ட, ரெண்டாவது கட்ட நிர்வாகிகள் கட்சி தலைமையானவர் தேவையானவற்றை நமக்கு செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தாங்களாம்.. மலராத தாமரையை நம்பி சென்று பின்னர் அங்கிருந்து வெளியேறிய தலைமையானவர் வரும் தேர்தலில் என்ன செய்ய போகிறார் என தெரியவில்லையாம்..
கடந்த சில தினங்களுக்கு முன் மன்னர் மாவட்டம் வந்த தலைமையானவர் கட்சி நிர்வாகிகளை பெரிதாக கண்டுகொள்ள வில்லையாம்.. இதனால் தலைமையானவர் மீது அதிருப்தியில் இருக்க கூடிய நிர்வாகிகளில் சிலர், தேர்தலுக்கு முன் மாற்று கட்சிக்கு செல்ல அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்காங்களாம்... இவர்களது செயல்பாடுகள் குறித்து சீனியர் நிர்வாகிகள் சிலர், தலைமையானவர் கவனத்துக்கு கடிதம் மூலம் கொண்டு சென்று இருக்காங்க.. இந்த தகவல் தெரிய வந்த நிர்வாகிகள், தலைமையிடம் தங்கள் மீது நடவடிக்கை எடுத்தா எடுக்கட்டும்..
இங்க இருக்குதும் ஒன்னுதான், இல்லாததும் ஒன்னுதான் என அவர்களுக்குள் பேசிக்கிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கூடுதல் பொறுப்பு வரவர பணிச்சுமைதான் வரும். ஆனால், மான்செஸ்டர்ல பொறியாளர் ஒருத்தருக்கு கரன்சியாக வந்து குவியுதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் ஐந்து எழுத்து பெயர் கொண்ட இன்ஜினியர் ஒருத்தர் வேலை செய்கிறார்.. இதற்கு முன்பு இதே மண்டலத்தில் இரண்டு வார்டுகளுக்கு மட்டும் அசிஸ்டன்ட் இன்ஜினியரா இருந்தாராம்..
சமீப காலமாக கூடுதல் பொறுப்பாக உதவி செயற்பொறியாளர் பணியும் இவரது வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.. அதனால், இந்த மண்டலத்தில் உள்ள 20 வார்டுகளும் தம் கைக்குள் வந்துவிட்டது என ஒரே குஷியாக இருக்கிறாராம்.. வழக்கமாக, கூடுதல் பொறுப்பு வர வர பணிச்சுமை தான் அதிகமாக இருக்கும். ஆனால், இவருக்கோ கரன்சி குவியல் அதிகமாக இருக்காம்.. இவர், ஏற்கனவே இரண்டு வார்டுகளை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தபோது, பாதாள சாக்கடை குழாய்களை ஆங்காங்கே தோண்டி போட்டு விடுவாராம்..
ஏன் என மேலதிகாரிகள் கேட்டால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி சமாளிக்கிறதோடு மட்டுமல்லாது சரி செய்துவிடுவதாக கூறி ‘பில்’ போட்டு பணத்தை எடுத்துவிடுவாராம்.. இப்ப ஒட்டுமொத்த மண்டலமும் தன்னோட கட்டுப்பாட்டில் இருக்கிறதால கான்ட்ராக்டர்கள் எல்லோரையும் வரவழைத்து ரகசியமாக மீட்டிங் போட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.