நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்; நான் எப்பொழுதும் மக்களுடன்தான் பயணிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி பேட்டி!!
சென்னை: நாளை மறுநாள் கோவையில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். இந்நிலையில் 2026 தேர்தல் பரப்புரை பயணத்துக்கான இலச்சினை மற்றும் பாடல் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை கழக அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;
நான் எப்பொழுதும் மக்களுடன்தான் பயணிக்கிறேன்: இபிஎஸ்
நான் எப்பொழுதும் மக்களுடன்தான் பயணிக்கிறேன். எனது சுற்றுப் பயணம் மூலம் அதிமுக மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெறும். எனது சுற்றுப் பயணம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஜூலை 7ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்குகிறேன்.
விஜய் கூறியது அவரது கருத்து: எடப்பாடி பழனிசாமி
பாஜக, திமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என த.வெ.க. தலைவர் விஜய் பேசியது அவருடைய கருத்து. தங்கள் கட்சிகளை வளர்க்க விமர்சிப்பது மற்ற கட்சிகளின் இயல்பு என்று விஜய் குறித்த கேள்விக்கு பழனிசாமி பதில் அளித்தார். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன்.
கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு: எடப்பாடி பழனிசாமி
எங்களுடன் கூட்டணியில் உள்ளவர்களை தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு அழைத்துள்ளோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
தேமுதிகவுக்கு அழைப்பு?: இபிஎஸ் பதில்
2026 ஜனவரியில் கூட்டணி குறித்து தேமுதிக அறிவிப்பதாக தெரிவித்துள்ளது என தேர்தல் பிரச்சாரத்திற்கு தேமுதிகவுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு இபிஎஸ் பதில் அளித்துள்ளார்.
நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்: எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி, நான்தான் முதலமைச்சர் வேட்பாளர். கூட்டணி குறித்து அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார். ஒத்த கருத்துகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். அதிமுக ஆட்சியமைக்கும்; அதிமுக தலைமையில் கூட்டணி என்று அமித்ஷா கூறினார். எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா சென்னையில் அறிவித்தார்.
அதிமுக கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வரும்: இபிஎஸ்
அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும் எனவும், 2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.