ஜன் சூரஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி :ஜன் சூரஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு இரண்டு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜன் சூரஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு பிகார், மேற்குவங்கம் என இரண்டு மாநிலங்களில் வாக்குரிமை இருக்கிறது. ஒரு ஓட்டானது, மேற்கு வங்கத்தில் இருக்கிறது. எண் 121, கலிகாட் சாலை, பஹபானிபூர் என்ற முகவரியில் இந்த ஓட்டு உள்ளது. இந்த முகவரியில் தான் திரிணமுல் காங்கிரசின் அலுவலகமும் இருக்கிறது. பஹபானிபூர் தொகுதி முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியாகும்.
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2021ம் ஆண்டு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். அப்போது திரிணமுல் காங்கிரஸ் அலுவலக முகவரியை அடையாளமாக கொண்டு அவர் ஓட்டுரிமையை பெற்றுள்ளார். அவரின் ஓட்டுச்சாவடி ராணிஷங்கரி லேனில் உள்ள செயிண்ட் ஹெலன் பள்ளியாகும்.மற்றொரு ஓட்டானது, பீஹாரில் கர்காஹர் தொகுதியில் இருக்கிறது. இந்த தொகுதி சாசாரம் எம்பி தொகுதிக்குள் வருகிறது. அவரின் ஓட்டுச்சாவடி மத்ய வித்யாலாய, கோனார் கிராமம், ரோஹ்டாஸ் மாவட்டம் என்ற முகவரில் இருக்கிறது. இது தான் பிரசாந்த் கிஷோரின் பெற்றோரின் ஊராகும். பீகாரில் அர்ராஹ் என்ற பகுதியில் தான் பிரசாந்த் கிஷோர் பிறந்தார். இதையடுத்து, ஒரு நபருக்கு இரு இடங்களில் ஓட்டுரிமை இருப்பது எப்படி என்ற கேள்வியை பலரும் எழுப்பி இருக்கின்றனர்.