தேர்தல் ஆணையம் மீதான அவநம்பிக்கை அதிகரிப்பு; தேர்தல் ஆணையமே விளக்கம் அளிக்க வேண்டும்: சரத் பவார் பேட்டி!
மும்பை: வாக்கு திருட்டு பற்றிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றுவது தேர்தல் ஆணையம் மீதான அவநம்பிக்கையை அதிகரிக்க செய்வதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியிருக்கிறார். விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் வாக்குத் திருட்டு நடந்திருப்பதாக கூறி ராகுல் காந்தி, வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொண்டார். கர்நாடகாவில் ஆலந்த் சட்டமன்ற தொகுதியிலும் வாக்கு திருட்டு நடந்து இருப்பதாக அண்மையில் ஆதாரங்களுடன் அவர் தெரிவித்து இருந்தார். வாக்குகளை திருடி ஜனநாயகத்தை அழிப்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாத்து வருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டினார். ராகுல் கூடும் புகாருக்கு அவர் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக கூறி பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தொடர்பாக ராகுலும், மற்ற எதிர்க்கட்சி தலைவர்களும் முக்கியமான பிரச்சனைகளை எழுப்பி உள்ளதாக குறிப்பிட்டார். மக்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல் காந்தி, இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பியதை தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்து கொண்டு இருக்க வேண்டுமென்று அவர் கூறினார். ஆனால் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காத நிலையில், பாஜகவினர் பதில் அளித்து கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டிய சரத் பவார், இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் மீதான அவநம்பிக்கையை அவர்கள் மேலும் பற்றி எரிய வைப்பதாக தெரிவித்தார்.