ராகுல் காந்தியின் புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அவரது டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டம்
டெல்லி : ராகுல் காந்தியின் புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குவதற்கு வாக்காளரின் டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2023 சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடகாவின் அலந்து தொகுதியில், 6,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி கடந்த வாரம் ஆதாரங்களை வெளியிட்டார். இது தேர்தல் ஆணையத்துக்கு தெரிந்தே நடைபெறுவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ராகுல் காந்தி புகார் தெரிவித்தார். வாக்காளர்களுக்கு தெரியாமல் 3ம் நபர் மூலம் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து வாக்காளர் ஒருவர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அவரது டிஜிட்டல் கையெழுத்தை இணையத்தில் சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. முன்பு ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் பெயர் நீக்கம் செய்யும் நடைமுறை மட்டும் இருந்தது. தற்போது, விண்ணப்பம் 6, 7, 8 ஆகியவற்றை தாக்கல் செய்யும் போது டிஜிட்டல் கையெழுத்தை பதிவு செய்யும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவரின் ஆதார் எண், ஆதார் ஓ.டி.பி பெறப்பட்டு பின்னர் மின் கையெழுத்து சேர்க்கப்படும் வகையில் புதிய மாற்றம் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் ஒருவருக்கு தெரியாமல் பெயரை நீக்கும் மோசடியை தடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.