தேர்தலில் நிச்சயம் முத்திரை பதிப்போம்; நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்: டிடிவி தினகரன் பேட்டி
தஞ்சாவூர்: தஞ்சையில் இன்று முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், தமிழ் வளர்ச்சி, சமூக நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின் முகவரியாகத் திகழ்ந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த தினமான இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாடக ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் பத்திரிகையாளராக தன் ஈடு இணையற்ற எழுத்தாலும், உணர்ச்சி பொங்கும் பேச்சாலும் மக்கள் மத்தியில் புத்துணர்வை ஊட்டி, மனித சமுதாயத்தின் ஒப்புயர்வற்ற வழிகாட்டியாகத் திகழ்ந்த தனிப்பெரும் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
75 ஆண்டுகால மற்றும் 50 ஆண்டு கால கட்சிக்கு இணையாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாகிவிட்டது. வருகின்ற தேர்தலில் நிச்சயம் முத்திரை பதிக்கும். நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை. உறுதியாக கூறுகிறேன். வருகின்ற மே மாதம் இதற்கான அர்த்தம் உங்களுக்கு புரியும்.
எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் அதை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை. அ.தி.மு.க ஒன்றிணைப்புக்கான 10 நாட்கள் கெடு முடிந்தது குறித்து அதற்கான விளக்கத்தை செங்கோட்டையன் அளிப்பார். எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்வது அது அவரது விஷயம் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.