தேர்தல் பரப்புரை நாகரிகமாக இருக்க வேண்டும்: சுதர்சன் ரெட்டியை விமர்சித்த அமித்ஷாவிற்கு முன்னாள் நீதிபதிகள் கண்டனம்!
டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 18 பேர் கண்டம் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். என்டிஏ கூட்டணி சார்பில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிற்கிறார். இதற்கிடையே கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, சுதர்சன் ரெட்டி நச்சல் பயங்கரவாதத்துக்கு உதவியவர். சல்வா ஜுடும் தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், நக்சல் பயங்கரவாதம் 2020ம் ஆண்டே முடிவுக்கு வந்திருக்கும். நக்சல் சித்தந்தத்தால் உந்தப்பட்டு இந்த தீர்ப்பை வழங்கினார் என குற்றச்சாட்டி இருந்தார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து சுதர்சன் ரெட்டி அளித்த பேட்டியில்; மாவோயிஸ்டு விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு 40 பக்கங்களை கொண்டது. அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா படிக்க வேண்டும். அவர் படித்திருந்தால் நான் நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என்று கூறியிருக்கமாட்டார். மேலும் அந்த தீர்ப்பை தான் நான் எழுதினேன். ஆனால் அந்த தீர்ப்பு என்னுடையது அல்ல. சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது. எனவே இதை விட்டுவிடுவோம். விவாதத்தில் கண்ணியம் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து முன்னாள் நீதிபதிகள் 18 பேர் கொண்ட குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் நீதிபதிகள் மதன் லோக்குர், செலமேஸ்வரர், குரியன் ஜோசப், சந்துரு, அபய் ஒகா, கோபால கவுடா உள்ளிட்ட 18 முன்னாள் நீதிபதிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; அமித் ஷாவின் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு எதிரானது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாரபட்சமான குதர்க்க விளக்கத்தை அமித் ஷா அளித்திருக்கிறார்.
நக்சலிசத்தையோ, அந்த கொள்கையையோ ஆதரிக்கும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பரப்புரை நாகரிகத்துடனும் மாண்புடனும் இருக்க வேண்டும். வேட்பாளர்களின் கொள்கைகளை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். அரசின் உயர்பதவியில் இருப்பவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை தவறாக விளக்குவது நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்கும். சல்வா ஜுதும் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பொதுவெளியில் அமித் ஷா விமர்சித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று முன்னாள் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.