வயதான தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ் வளர்ச்சி துறையின் இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழுக்கு தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் உதவித்தொகை ரூ.7500ம், மருத்துவப்படி ரூ.500ம் என மொத்தம் ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்கள் மறைவுக்கு பின்னர், அவரின் மனைவி அல்லது திருமணமாகாத மகள் / விதவை மகளுக்கு, ரூ.2500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 வழங்கப்படுகிறது.
தமிழ் வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கையின்போது, “தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தற்பொழுது, ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்கள் தெரிவு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 150ஆக உயர்த்தப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூ.48 லட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்\\” என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையினை 100ல் இருந்து 150ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் tamilvalarchithurai.org/agavai/ என்ற வலைதளம் வாயிலாகவும், நேரிலும் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிதம் மண்டல / மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை/ உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.