பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தங்கை மீது முட்டை வீச்சு
ராவல்பிண்டி: பாகிஸ்தான் அரசு கருவூலமான தோஷகானாவில் வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை விற்ற குற்றத்திற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது சிறையில் இருக்கும் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி மீதான வழக்கின் விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக இம்ரான் கானை சிறையில் பார்ப்பதற்காக அவரது தங்கை அலீமா கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலைக்கு வந்தார்.
அவர் சிறைக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது, அவர் மீது திடீரென முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அலீமா கானின் தாடையில் பட்டு, அவரது உடையில் முட்டை விழுந்த காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.